இதயம் முழுதும் அவன் மொழி – 25

மொழி – 25
கீரிமலை தீர்த்தத்தில் நீராடி வந்தவளின் கையில் டவலை கொடுத்தாள், சொரூபன் அவளுக்காய் எற்பாடு செய்திருந்த பெண் உதவியாளர். அந்தப் பெண்ணே அவளை உடைமாற்றும் அறைக்கு அழைத்து சென்றாள்.
பஞ்சாபி அணிந்து வெளியே வர சொரூபன் நின்றிருந்தான். அவனும் முழுகி வந்ததில் கேசம் நெற்றியோடு ஓட்டி முகத்திற்கு சோபையை அளித்துக் கொண்டிருந்து.
“வாரும்” ஒற்றரை சொல்லுடன் நடக்க அவனை பின்தொடர்ந்தாள் யதி.
கடற்கரையில் ஐயர் அருகே அமர முன் தன் சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தான். ‘இதை என்ன செய்ய?’ என்பது போல் பார்த்து வைக்க, உதட்டினுள் சிறு புன்னகையுடன் கூறினான் “ஒண்டும் செய்ய வேண்டாம், கையில் வைத்திருமப்பா”.
‘அப்பா’ மனதினுள் சொல்லிப் பார்த்தவளுக்கு அவன் வேறு யாரையும் அப்படி அழைத்து பார்த்ததில்லை என்பதும் சேர்ந்தே வந்தது.
ஐயர் சொல்ல சொல்ல அவன் செய்வதை சிறு ஆர்வத்துடன் பார்த்தாள் யதி.
கடைசியாய் அவன் ஐயரிடம் ஏதோ சொல்ல அவள் கையில் தெர்ப்பையை கொடுக்கவே சொரூபனை கேள்வியாய் நோக்கினாள்.
“போடும்” என்றான்.
அவளது அம்மா அப்பாவின் பெயரை சொல்லி அனைத்தும் செய்து கடைசியாய் அவள் கையிலும் ஒரு தட்டை வைத்து ஐயரிடம் கொடுக்க சொன்னான். லேசாய் கண் கலங்கிய போதும் அவன் சொன்னதை செய்தாள். இறைவன் சந்நிதானம் சென்று வணங்கி விட்டு திரும்பும் போது கேட்டாள் “அதுதான் அன்று அங்கேயே செய்தோமோ? பிறகு ஏன் இங்கும்?”.
“இங்கே செய்வது காசியில் செய்வதற்கு ஈடானது என்று ஒரு ஐதீகம் உண்டு” அவள் குனிந்திருந்த தலையை மென்மையாய் பார்த்தவன் “இங்கே நீராடினால் செய்த பாவங்கள், உடலில் இருக்கும் நோய்கள் எல்லாம் விலகும் என்று அம்மம்மா சொல்வார்” எதையோ அவளுக்கு உணர்த்த முயன்றான்.
மனிதர்களை மூன்று வகையாய் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், இரண்டும் கெட்டான். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைத்தையும் இறைவன் மேல் போட்டு விட்டு வருவதை இறை நம்பிக்கையுடன் எதிர் கொள்வார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நானே ராஜா நானே மந்திரி எதை பற்றியும் அச்சம் பயம் இல்லை என்ற ரீதியில் வாழ்ந்து விடுவார்கள். இந்த இரண்டும் இல்லாதவர்கள் பாடு கஷ்டம்தான். அந்த வகையில் தான் யதீந்திரா இருந்தாள்.
சிறு வயதில் அன்னையின் வழிகாட்டலில் இறை நம்பிக்கை விழுமியங்கள் என்று கடைபிடித்தாலும் பின்னாளில் நிகழ்ந்த நிகழ்வுகளால் மனம் கசந்து கடவுள் நம்பிக்கை விட்டிருந்தது. இப்போது சொரூபனைப் பார்க்கவும் இறையும் பாகுபாடு காட்டுமோ! எனது பாவங்கள்தான் காரணமோ என்று தோன்றவும் தொடங்கியிருந்தது.
அதற்கு அவளை குறை சொல்லியும் பயனில்லை. சில இடங்களில் சொரூபன் செய்வது அநியாயம் என்றாலும் அவனோடு துணை நிற்க எத்தனை பேர் கண்மணி அம்மம்மா, நிஷாந்த, அவன் நம்பிக்கையான வட்டத்தினுள் இருக்கும் பலர், ஏன் அவளே எல்லாம் தெரிந்தே அவனை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தாள், செய்கின்றாள்.
அவனையே இமைக்காது நோக்கியவளை நோக்கி ஒற்றை புருவம் உயர்த்தினான் “என்ன?”.
“யூ ஆர் லக்கி”
“அது உண்மைதான்” என்றான் கர்வத்துடன்.
கசங்கிய முகத்துடன் விலகியவள் கையைப் பிடித்து நிறுத்தி கூறினான் “உன்னைப் போல ஒருத்தி காதலிக்கும் எவனும் கொடுத்து வைத்தவன்தான்”
“என்னை நீங்கள் சந்திருக்காவிட்டால் உங்களுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது.” தன்னைத் தானே வெறுப்பது அவள் முகத்திலும் குரலிலும் பட்டவர்த்தனமாய் தென்பட்டது. “ஆனால் நம் திருமணத்தின் காரணமே வேறே”.
அவள் வார்த்தையில் தென்பட்ட வலியில் அவன் விரல்கள் அவளை நழுவ விட காரில் சென்று அமர்ந்தாள். டிரைவர் சீட்டில் தானும் அமர்ந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் முடியட்டும் என்று காத்திருந்தது தவறோ என்று தோன்றத் தொடங்கியது.
தொண்டையை செருமி “யதி” மென்மையாய் அழைத்தான் “இங்கே வா”.
அவனை நோக்கி சாயவே சற்று முன்னே குனிந்து நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான். அவளையும் அறியாமல் உள்ளிருந்த சோகமும் அழுத்தமும் தற்காலிகமாய் விடைபெற ஒரு துளி நீர் கன்னத்தில் வழிந்தது.
******
பிள்ளைகளோடு பிள்ளைகளாய் நின்றாவாறு அங்கிருந்த பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள் யதீந்திரா. ஒரு வால் இடையே புகுந்து ஓட, அந்த குழந்தையை பிடித்து வலிக்காமல் கன்னத்தை கிள்ளவே கிளுக்கி சிரித்தது அது.
அனைத்தையும் அந்த இல்லத்தின் பொறுப்பாளரிடம் கதைத்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
அவளின் மனம் சரியில்லை என்பதை உணர்ந்தவனாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தான். இல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் இந்த சிறுவர் மற்றும் பெண்கள் காப்பகத்திற்கு வருவான்தான், இன்று போல் இவ்வளவு நேரம் செலவு செய்ய மாட்டான். இங்கே வந்து சற்று நேரத்திலேயே யதியின் முகத்தில் புன்னகையைப் பார்த்தவன் கண்மணிக்கு அழைத்து வர நேரமாகும் என்று சொல்லிவிட்டான்.
அங்கிருந்த அனைவரும் உண்ட பின்பு அவர்களும் உண்டு விட்டு புறப்பட்ட போது நேரம் மூன்றை நெருங்கியிருந்தது.
‘இன்று என்ன நடந்தாலும் அவளிடம் கதைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு காரை எடுத்தவனுக்கு தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் அவன் உலகமே தலை கீழாக மாறப் போவது.
*****
இருவருமாய் வீட்டினுள் நுழைந்த போது கல்யாணி சொரூபனை சுட்டிக் காட்டி யாரிடமோ கூறினாள் “வீட்டுகாரரைதான் கேட்க வேண்டும்”.
அவளை எரித்து விடுவது போல் பார்த்த யதீந்திரா வேகமாய் உள்ளே நுழைய கண்ணில் விழுந்தது அந்தப் படம்.
பூ, பொட்டு எல்லாம் வைத்து மாலை போட்டு முன்னே குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வேகமாய் அருகே சென்றவள் விளக்கை தட்டிவிட்டாள். மாலையை கழட்டி எறிந்தாள். ஷோலால் பொட்டை துடைக்க போக அவள் கையிலிருந்து படத்தை பறித்தான் சொரூபன்.
யதியின் கோபத்தின் காரணத்தை உணர்ந்து புன்முறுவலுடன் வந்தவன் முகம் இறுகி விட்டிருக்க படத்தை அதற்குரிய இடத்தில் வைத்தவன் “என்னை விசரன் ஆக்கதா” இறுகிய குரலில் எச்சரித்தான்.
அவளோ அவன் சொல்வதை காதிலே வாங்காமல் மீண்டும் படத்தை எடுப்பதிலேயே குறியாய் இருந்தவளை இழுத்து விட்ட அறையில் கண்ணுக்குள் பூச்சி பறந்தது.
“சொன்னால் கேட்க மாட்டாய்” உறுமியவன் மீண்டும் கையோங்கினான்.
“சொரூபன் பொறு” இடையில் வந்தார் கண்மணி.
அவளிடம் திரும்பி “என்னம்மா இது மகளின் துவசம்” என்று தொடங்குவதற்குள் “உயிரோடு இருப்பவர்களுக்கு விளக்கு ஏற்றி வைக்கிறீங்க, உங்களுக்கு என்ன பைத்தியமா?” சொரூபனிடம் சீறினாள் யதி.
மீண்டும் ஒங்கியவன் கை மெதுவே கீழே இறங்க பாலா அருகே வந்தார்.
“என்னம்மா சொல்ற, அஅவ அவ உயிருடனா இருக்கிறாளா? உண்மையா?”
“ஹா… நிஜமாதான்” என்று விளக்கை அணைத்து பொட்டு, மாலையை அகற்றும் அவளையே வெறித்துப் பார்த்த சொரூபன் வினாவினான்.
“ஏன் இவ்வளவு நாளும் சொல்லல”
“நீங்கள் ஏன் இவர்களுக்கு…” ஏதோ கேட்க வந்து நிறுத்தியவள் “இவர்களை உங்களுக்கு எப்படித் தெரியும்” குழப்பமாய் கேட்டாள்.
அவன் அமைதியாய் நிற்கவே “நீங்கள் ஏன் இதெல்லாம்…” கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே கிடைத்த விடையில் விக்கித்துப் போய் நின்றாள்.
படத்தில் இருந்த பெண்ணையும் கண்மணியையும் சேர்த்து வைத்துப் பார்த்த போது உருவ ஒற்றுமை புரிய “இவர்கள் உங்கள் அம்மாவா?” காற்றாகி போன குரலில் கேட்டாள்.
“என் அம்மாவை தெரியாதா?” வெறுமையாய் கேட்டான் சொரூபன்.
“நான் சந்தித்தது இல்லையே” தவிப்புடன் பதிலளித்தாள். இந்த பதினைந்து வருட துன்பத்தை அவனை அணுக விட்டிருக்க மாட்டாளே!
உண்மைதான் தர்சினி அதிகம் அவனுடன் வெளியே வந்ததில்லை. வந்த போது… வேதனையாய் மூச்சு விட்டவன் “அவர்களுக்கு தெரியும்தானே” அவன் கேள்விக்கு பதிலாய் வேகமாய் தலையாட்டி மறுத்தாள் “இல்ல ஒரு விபத்தில்… தான் யாரென்றே தெரியாது”.
அவளையே கூர்ந்து பார்த்தவன் முகம் காகிதமாய் வெளுக்க அவள் கையை இறுக்கி பிடித்தான் “இப்போது அவர்கள் எங்கே?” அவன் யோசனை தறி கெட்டு எங்கெங்கோ ஓடியது.
சிலவேளை அவராக இருந்தால்…
நிற்க முடியாமல் தடுமாற பாய்ந்து பிடித்துக் கொண்டவளை ஒரேயொரு கேள்வி கேட்டான் “அவர்களா?”
அவன் கண்கள் கெஞ்சியது ‘இல்லை என்று சொல்’.
“இல்ல இவர்கள் வேறு. நான் நடத்தும் இல்லத்தில் இருகின்றார்கள். நாம் இந்தியா போகும் போது அவர்கள் உங்கள் வீட்டில் இருப்பார்கள்” அவன் கண்களை பார்த்து உறுதியாய் கூறினாள்.
முடிந்த வரை நேராய் கண்களை பார்த்து பதில் சொல்ல முயன்றாள். ஆனாலும் சின்ன தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது.
சில கணங்கள் அவளை ஆழ்ந்து பார்த்தவன் வறட்சியாய் சிரித்தான்.
“இரவே கொழும்பு போவோம்” உணர்ச்சியின்றி சொல்ல “நாங்களும் வருகிறோம்” என்றனர் கண்மணியும் பாலாவும். மறுத்து எதுவும் சொல்லவில்லை அவன்.
சோர்ந்த நடையுடன் அவன் மேலே செல்ல மெதுவே நிஷாந்தவை நெருங்கி “எனக்கு ஒரு உதவி வேண்டும்” என்றாள் மெல்ல.
“எனிதிங் நங்கி” லேசாய் புன்னகைத்தவன் விழிகள் விரிந்தது. மேலே சென்று கொண்டிருந்த சொரூபனை நோக்கியவன் மீண்டும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க ஆமோதிப்பாய் தலையாட்டினாள்.
சிலவேலைகளை முடிக்க வேண்டும் என்று கண்மணி வெளியே சென்று விட நேரத்தை பார்க்க, மணிக்கூடு மணி நான்கு என்றது. நீண்ட பெருமூச்சை வாய் வழியே விட்டு மாடியேறினாள்.
சோபாவில் அமர்ந்து கைக்குட்டையால் மூக்கில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தான் சொரூபன். அவன் மடியில் அமர்ந்து இரு கன்னத்தையும் தாங்கியவள் “உங்கள் அம்மா உயிரோட இருக்கிறார்கள். இது சந்தோஷ பட வேண்டிய விஷயம். ஏன் டென்சன்” நுனி விரல்களால் முகத்தை வருடிவிட்டாள்.
“தெரியல, ஆனா நான் செத்துட்டாங்க எண்டு முடிவெடுக்கமா தேடி இருக்கணும் இல்ல” மெல்லிய கண்ணீரோடு அவளைக் கேட்டான்.
எத்தனையோ துக்கமான இரவுகளை தவிர்த்திருப்பானே!
பாலாவின் சோகம்…
அம்மம்மாவின் அழுகை…
அனைத்துக்கும் மேலாய் முன்னிருப்பவளை துன்புறுத்தி இருக்க மாட்டானே!
அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள் “இப்ப கிடைச்சிட்டாங்க, அது மட்டும் தான் முக்கியம்” அவன் இதழ்களில் தன் இதழ்களை புதைத்துக் கொண்டாள். அவளுக்குத் தெரியும் இப்போது அவனின் தேவை அவள். இல்லாவிட்டால் அன்று போல் தன் சுயம் தொலைத்து விடுவான்.
முத்தத்தை இன்னும் ஆழமாக்க அவனோ அவளுக்கு வலிக்காது விலகினான் “இல்ல இது தப்பு”.
“இது என்ன?” அவன் கட்டிய பொன் தாலியை ஒற்றைக் கையில் பிடித்தவாறே கேட்டான்.
சோர்வுடன் பார்த்தவன் அவள் கன்னம் வருடி “சொறி” என்றான்.
“பரவாயில்ல அது வலிக்கல” புன்னகையுடன் பொய்யுரைத்தவள் தோள் வளைவில் முகம் புதைத்து “பக்கத்தில் இருந்தாலே போதுமப்பா” என்றான்.
‘அது என்ன அப்பா’ மனம் மீண்டும் கேள்வி கேட்டது. ஆனால் இப்போது அவனை கேள்வி கேட்க விரும்பாமல் தலை கோதி கொடுத்தாள்.
அடுத்த இருபத்து நாலு மணித்தியாலத்தில் சென்னையில் நின்றார்கள். சென்னை வந்து அடுத்த பதினான்கு நாட்களில் மாயமாய் மறைந்திருந்தாள் யதீந்திரா.
