இதயம் முழுதும் அவன் மொழி – 24
மொழி – 24

“இதை செய்தே தான் ஆக வேண்டும், உனக்கு தெரியாது மச்சா, விளக்கமா சொல்ல இப்ப நேரமில்ல”
அவள் நின்ற இடத்தின் மேல் இருந்த மாடி பல்கனியில் நின்று நிஷாந்த உடன் எதையோ தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தான் சொரூபன். சூரியனுக்காய் போட்டிருந்த ஷடோ அவள் உருவத்தை இருவர் கண்ணிலிருந்தும் மறைத்திருந்தது.
“நீ சொன்ன மாதிரியே விபத்துக்கான அத்தனை ஆதாரங்களையும் சேகரித்தாகிவிட்டது. இனி நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் மிச்சம்” என்றான் நிஷாந்த்.
இருண்டிருந்த அடிவானை அமைதியாய் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன்.
“இதை செய்தே தான் ஆக வேண்டுமா? இனி நடந்தது எதையும் மாற்ற முடியாது தானே” சொரூபனின் மௌனத்தை பார்த்து விட்டு மீண்டும் கேட்டான் நிஷாந்த.
“அப்படியில்ல அவளை” என்று ஏதோ சொல்ல வந்தவன் அவர்கள் இருந்த இடத்துக்கு சற்று தூரத்தில் ஏதோ அரவம் கேட்கவே வேகமாய் அந்தப் பக்கம் சென்று பார்த்தான்.
இருவரும் வெளிப்படி வழியே இறங்கி வருவது தெரிய அதற்கு மேல் யதியும் அங்கு நிற்காமல் விலகி வந்து விட்டாள்.
செடியின் மறைவிலிருந்து ஒரு உருவம் செல்ல, சத்தமின்றி அதை கவனித்த சொரூபனும் நிஷாந்தவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நிஷாந்த் கண்கள் விரிய கேட்டான் “அவன்தானா?”
“ஜெகதீஷ்” என்று பல்லை கடித்த சொரூபன், லேசாய் சிரித்தவாறு சொன்னான் “அவன்தான் அந்த கருப்பு ஆடு”
“யதிக்கா” நம்ப முடியாத திகைப்புடனும் குழப்பத்துடனும் கேட்டான் நிஷாந்த. “ஆனால் அவனுக்கு எப்படி யதியை தெரியும் உன்னிடம்தானே இவ்வளவு காலம் வேலை செய்கிறான்”.
கண்கள் சுருங்க தாடையை தடவினான் சொரூபன் “ஒரு கெஸ் இருக்கு. என்ன செய்கிறான் பார்ப்போம்” அவனைக் கண்காணிக்கவும் ரகசியமாய் ஆள் போட்டான்.
ஆனால் அவனோ ஒரு ஓரமாய் அமர்ந்திருந்து கைபேசியை பார்ப்பதும் சொரூபன் சொல்வதை செய்வதும் ஓரத்தில் அமர்ந்து உறங்கியதையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
அவ்வளவு ஏன், காதில் விழுந்த செய்தியை கூட யதியிடம் பரிமாறிக் கொள்ளவில்லை. அவன் கைபேசியில் இருந்து எந்த ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ கூட போகவில்லை யதியின் மற்ற இலக்கத்தையும் கண்டு பிடித்து இருந்தான். அதிலும் அவர்களின் கல்யாண சான்றிதழை மட்டும் அனுப்பியிருந்தான்.
“ஏன் கண்மணி அப்படி எங்களில் ஆட்கள் இல்லாமலா போட்டோம். ஒரு வார்த்தை கேட்க கூடாது” அறையை நோக்கி போகும் யதியை பார்த்தவாறே கண்மணியின் வயதினை ஒத்த மூத்த பெண்மணி ஒருவர் கேட்க “என்ர பேரனின்ட சந்தோசம்தான் எனக்கு முக்கியம். இப்ப அவன் வேணும் என்டு சொல்ற யாருமே அவன் கஷ்டபடும் போது திரும்பிக் கூட பார்க்காத ஆட்கள் தானே.” லேசாய் சொல்லியும் காட்டினார்.
ராஜாவை போல் வளர்த்த பிள்ளை தெருவில் நிற்கும் போது சொந்தம் என்று ஒருவர் கூட கை கொடுக்காதது அவர் மனதிலும் கசப்பை விதைத்திருந்தது. என்ன சொரூபனிடம் அதை காட்டிக் கொள்ள மாட்டர்.
அவர்கள் அறையை நோக்கிச் சென்ற யதியின் காதுகளிலும் இந்த உரையாடல் விழவே செய்தது.
அறைக்குள் வரும் வரை சமாளித்தவளுக்கு அதற்கு மேல் முடியாமல் கண்ணில் முட்டிக் கொண்டு நின்ற நீர் கரை கடந்த வெள்ளமாய் கன்னத்தில் வழிய திடீரென இரு கரங்கள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டது.
“இதற்கெல்லாமா அழுவார்கள் ஹா” புருவம் நெறிய கேட்டான் சொரூபன். இது போன்ற சிறுவிடயங்களுக்கும் அழும் ஆளில்லையே அவள். மேல் மாடியில் நின்று யதியை பற்றி கதைத்ததையும் அவள் கலங்கிப் போய் வந்ததையும் பார்த்திருந்தான்.
யதிக்கு விளங்கவே செய்தது அவன் சொந்தகாரர்களின் கதையை கேட்டு அழுவதாய் நினைக்கிறான் என்று. எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றவள் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.
“ப்ச் நிமிர்ந்து என்னை பாரும்” அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை நோக்கியவன் தேகம் நடுங்கியது.
அன்று போலவே உணர்வுகளற்ற பார்வை….
அதிலும் இந்தியாவை விட்டு வெளிக்கிடும் முன் மாறன் சொன்னவை, அவனுக்கு கிடைத்த தகவல்கள்…
அன்று, பல வருடங்களுக்கு முன்னர் அவளை பார்த்த போது இந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அன்று என்ன நிலையில் இருந்தாள் என்பது இன்று தெளிவாகவே தெரிந்திருக்க “யதி” பயத்துடன் அழைத்தான்.
ஏதோ யோசனையில் இருந்து விழித்தவள் போல் “ஓஹ் நீங்கள் போக வேண்டுமா? கீழே ஆட்கள் காத்திருப்பார்கள்” அவனிடமிருந்து விலகினாள். கண்ணில் வழிந்த கண்ணீருக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருந்தது அவள் செயல்.
நாளை மட்டும் அம்மாவின் ஆண்டு துவசமாய் இல்லாதிருந்தால் இந்த இடத்தையே ரணகளம் ஆகியிருப்பான்.
நாளைய தினத்தின் முக்கியத்துவம் அவன் வாயை அடக்கியிருந்தது. அவள் குளியலறை செல்லவே கதவைத் திறந்து அந்தப் பக்கம் சென்ற ஒருவரை அழைத்தான் ‘ராசன் அண்ணா”.
சிறிது நேரம் கண்ணாடியில் தன்னைத்தானே வெறித்துப் பார்த்த யதீந்திரா தண்ணியடித்து முகத்தை கழுவிக் கொண்டு வெளியே வர சொரூபன் கையில் தண்ணீர் கப்புடன் கதவைச் சாற்றினான்.
கேள்வியாய் பார்க்க “இதைப் போடும்” அவள் கையில் மருந்தினை வைத்தான்.
“என்ன மருந்து?”
“நித்திரை குழுசை”
வேண்..” வேண்டாம் என்று சொல்ல வந்தவள் மறு பேச்சின்றி விழுங்கினாள். அவள் இரவில் வழமையாக அணியும் த்ரீ குவட்டேர் ஜீன்ஸ் டீ சேர்ட்டை கையில் கொடுத்தவன் போனுடன் பல்கனி சென்றான்.
புருவ சுளிப்புடன் கட்டிலில் அமர்ந்தாள் யதீந்திரா. மனம் குழம்பிப் போயிருந்தது. அவளின் தொழிலதிபர் மூளை ‘இப்போது எந்த முடிவையும் எடுக்காதே’ என்று எடுத்து கூற அடிபட்ட மனமோ ‘எல்லாத்தையும் விட்டு தூர ஓடு’ என்றது.
சொரூபன் மீண்டும் உள்ளே வந்த போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து உள்ளங்கையில் கைபேசியை தட்டிக் கொண்டிருந்தாள். அவள் முன் கட்டிலின் ஓரமாய் அமர்ந்தவன் காதோரமாய் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு சிறு சிரிப்புடன் கேட்டான் “நான் நித்திரை குழுசை தந்தனான், ஞாபகமிருக்கா?”
“குழுசை” என்று விழிக்கவே சிறு முறுவலுடன் சொன்னான் “டேப்லேட்”.
“ஒஹ்!”
“என்ன ஒஹ் படுக்கலய”
திடிரென முன்னே சாய்ந்து அவன் தோளில் கன்னம் பதித்து ஜன்னல் வழியே நட்சத்திரங்கள் மின்னிய வானை நோக்கியவள் மெல்லிய குரலில் கேட்டாள் “உங்களுக்கு என்ன வேண்டும்?”
அவள் தலையை வருடியவாறே சில கணங்கள் மௌனமாய் இருந்தவன் அடைத்த குரலை செருமிக் கொண்டு சொன்னான் “நீர்தான் வேண்டும்”.
அமைதியாய் விலகி கட்டிலில் படுத்தாள் யதீந்திரா. ‘இவனுக்கு என்னதான் வேண்டும்? எதற்கு இன்னும் நடிக்கிறான்? இனி பாப்பா இருந்தாலும் இல்லாவிட்டாலும் சொத்து கிடைத்து விடும், யோகேந்திரன் நிச்சயமாய் சிறை சென்று விடுவார். அந்த கார்மேன்ஸ் தவிர மீதி அனைத்தும் அவன் கைவசம். இன்னும் என்ன வேண்டும்? என் உயிரா! அதுவும்…’ தன் போக்கில் சிந்தித்தவளை கலைத்தது அவன் குரல்.
“எனக்கு நாளை வரை மட்டும் டைம் கொடு. நாளை இரவே எல்லாம் சொல்றேன்” அவன் குரல் கெஞ்சியது அவளுக்கு புரியவேயில்லை.
அவளருகே படுத்தவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு இடையை சுற்றிக் கையைப் போட்டான்.
பின்புறமாய் கழுத்தைத் திருப்பிப் பார்த்தவள் கண்ணிலிருந்த வெறுமையைக் கண்டு கொண்டவன், உடல் நடுங்க கெஞ்சினான் “அப்படி பார்க்காதே ப்ளீஸ்”.
அவன் உடலில் ஓடிய நடுக்கம் அவளுக்கு புரியவில்லை. அந்த நிலையை அவள் கடந்து விட்டது அவனுக்கு புரியவில்லை.
*****
சொரூபன் கொடுத்த நித்திரை குழுசையின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை உறங்க விடமால் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கையை பிடித்து கன்னத்தின் கீழ் வைத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள் யதீந்திரா.
அவளைப் பார்க்க சொரூபனுக்கு தெவிட்டவில்லை. மெல்லிய நகையுடன் கிச்சு கிச்சு மூட்டவே திரும்பிப் படுத்து “ச்சு சும்மாயிருங்கள் சொரூபன்” அடித்தாள். கை சொகுசாய் கதகதப்பின்றி குளிர்ந்திருந்த மெத்தை மீது விழுந்ததது. முகம் விழுந்து விட நேற்றிரவு என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றவளை தடுத்தது அவன் குரல்.
“இங்கே”
வெடுக்கென்று திரும்பிப் பார்க்க வேட்டி சட்டை அணிந்து கையில்லாத பெனியனுடன் நின்றான் சொரூபன்.
“மறுபடியும் திருவிழாவா?” அதிர்ச்சியுடன் கேட்கவே சிறு சிரிப்புடன் “சந்நிதி திருவிழா தொடங்கிட்டுதான் ஆனா இண்டைக்கு திருவிழாக்கு இல்ல, கீரிமலைக்கு, கெதியா குளிச்சு வாரும் நேரம் போகுது” என்றான்.
“கீரிமலைக்கா? ஏன் அங்கே?” முழுமையாய் உறக்கம் கலையாமல் அரட்டை அடித்தாள் யதி.
அதற்குள் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்த கண்மணி “ஞானா லேட் ஆகுது. அவவுக்கு ஏலாது எண்டா நீங்க மட்டும் போட்டு வாங்களேன்” எழுந்திருந்ததை பார்த்து “நேற்று ஏதோ ஏலமா வந்திட்டு என்றார், இப்ப ஒகேவா? ஒண்டும் கதையாம வீட்டில் நில்லுங்கோ. தம்பி மட்டும் கீரிமலை போய் வரட்டும்” என்றார்.
சொரூபனை நோக்க ‘நிற்க போறீரா?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.
“இல்ல இல்ல நானும் வாரேன்” வேகமாய் எழுந்து குளியலறை நோக்கிச் செல்லவே “முழுக வேண்டாம், குளிச்சுட்டு வாரும். உடுப்பு மேசையில் வைத்திருக்கிறேன்” என்றவாறு வெளியே சென்றான்.
முழுகி வந்தவள் வைத்திருந்த பஞ்சாபியை அணிந்து தலை இழுத்துக் கொண்டிருக்கும் போது “ரெடியா போவோமா?” கேட்டவாறே மீண்டும் வந்தான்.
“இதோ முடிந்துது” வேகமாய் இருபுறமும் கொஞ்ச முடியை எடுத்து கிளிப் மாட்டியவள் லேசான ஒப்பனையுடன் தயாரானாள்.
இருவருமாய் கீழே வர, அந்த இடமே ஆட்களால் நிரம்பியிருந்தது. சொரூபனுடன் நெருங்கி நின்றவள் கேட்டாள் “யார் இவர்கள்?”
“சொந்தகாரர்கள்” அவன் குரலில் இருந்தது என்ன? ஏளனம் ஒருவித வெறுப்பு ஒதுக்கம். சட்டென திரும்பி அவன் முகத்தைப் பார்க்க சாதரணமாய் தான் இருந்தது.
தலையைக் குலுக்கியவள் “இவ்வளவு பேருமா?” வியப்புடன் கேட்டாள்.
“ஹ்ம்” என்றவன் கீழே இறங்கி வர ஒரு பெண்மணி வழிமறித்தார் “நாங்களும் வரட்டுமே! எங்கட பழக்கவழக்கம் அவாவுக்கு தெரியாது தானே” பல்லைக் காட்டினார். அவர் அருகேயே நின்று யதியை குரோதமாய் முறைத்துக் கொண்டிருந்தாள் கல்யாணி.
“ராசன் அண்ணா” உள்ளே பார்த்து சத்தமாய் அழைத்தான்.
வேலையை மேற்பார்வை செய்து கொண்டிருந்த கண்மணி “என்னப்பு இன்னும் போகலே, நேரமாகி போட்டு ஐயர் வைட் பண்ணுவார்” சொரூபனையும் யதியையும் வழிமறித்து நிற்பதைப் பார்த்தவாறே அவனிடம் வந்தார். கூடவே எங்கே நின்ற அந்த ராசனும்.
“அவாவும் போன இங்கே வருபவர்களை யார் பார்ப்பது. அவ நிற்கட்டும், நானும் கல்யாணியும் வாரோம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் மாமி” கல்யாணியின் அம்மா புஷ்பம் மீண்டும் பல்லைக் காட்டினார்.
“என்ன ராசன் அண்ணா விருந்துக்கு வந்தவர்களை எல்லாம் இங்கே விட்டு இருக்கிறீர்கள்? அவர்களுக்கு என்ற இருக்கும் இடத்தில் கூட்டிட்டு போய் விடுங்கள்” என்று ராசனிடம் கடிந்தவன் “அம்மம்மா என்ற மனுசி ஜிஎம்எஸ் குரூப்கே ராணி. இங்கே அவ வேலை செய்ய தேவையில்ல. வேலை செய்பவர்களை மேற்பார்வை செய்வதுதான் அவவுன்ட வேலை. தெரியாத ஆட்களுக்கு கொஞ்சம் சொல்லி விடுங்க” என்றவன் திகைத்து போய் நின்ற யதியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
“அவன் இனி மாற மாட்டான். யதிதான் அவனுக்கு எல்லாம். நீ நல்லா இடமா பார்த்து கட்டு பிள்ள” அவன் பின்னால் போக முயன்ற கல்யாணியை பிடித்து நிஷாந்தவுடன் அனுப்பி வைத்தார் கண்மணி.
சொரூபன் காரை எடுத்த விதத்திலேயே அவன் அவன் கோபமாய் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட யதி “இப்ப எங்கே போறோம்?” பேச்சுக் கொடுத்தாள்.
“நகுலேஸ்வரம் கோவிலுக்கு”
யதிக்கு கோவில்களில் அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை எனவே அந்தக் கோவிலின் தொன்மை பெருமை எதையும் அறியாமல் “ஒஹ்” என்றாள்.
அவள் ‘ஒ’ வில் புன்னகைத்தவன் “இது பழமையான கோவில்களில் ஒன்று. சோழ நாட்டு இளவரசி, யமதக்கினி முனிவர் என்று கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் வரை வரலாற்று சான்று இருக்கு. ஆனா இப்ப பிரச்சனையால இடிந்து போய்க் கிடக்கு. கொஞ்சம் கொஞ்சமா வேலை தொடங்கீனம்” என்றான்.
“அவ்வளவு பழைய கோவிலா?” கண்ணை விரிக்கவே “ம்.. கண்டகி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் இருக்கு கடல் தண்ணி கலந்து தான் இருக்கும் ஆனா கடல் மாதிரி உப்பு கரிக்காது. நிலவறை கிணற்றில் தேசிக்காய் போட்டால் அடுத்த நாள் அங்கே மிதக்குமாம்” என்று தகவல் சொன்னவன் கண்ணில் சிறு குறும்புடன் அவளைப் பார்த்து கூறினான் “அங்கே முழுகினால் கெதியா பேபி கிடைக்குமாம்”.
அவன் பேச்சில் குழம்பியவள் “ஒஹ் அதுதான் தலை முழுக வேண்டாம் என்றீர்களா? ஆனா இப்போது தான் தேவையில்லையே” என்றாள் அப்பாவியாய்.
“என்ன தேவையில்ல” சட்டென எரிந்து விழுந்தவன் “கொஞ்ச நேரம் கதைக்காமல் அமைதியா வரும்” என்று விட்டு காரை நிறுத்தி வெளியே சென்றான். வெளியே சீருடையுடன் நின்ற இராணுவத்திடம் ஏதோ கதைத்தவன் மீண்டும் வந்து காரை எடுத்த போதும் புருவம் சுழித்தே இருந்தது.
மீதிப் பயணம் அமைதியில் கழிய, சிறிது நேரம் கழித்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த யதியை நோக்கி “யதி” மெதுவாய் அழைத்தான்.
அவனை தயக்கமாய் நோக்கினாள் அவள்.
“இன்னொரு தரம் இப்படி கதைக்காதே, எனக்கு கோபம் வரும்” என்றான் அடியுமின்றி நுனியுமின்றி.
என்னவென்று விளங்காவிட்டாலும் தலையை மட்டும் உருட்டி வைத்தாள்.
ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கி அவளுக்கும் கதவைத் திறந்து விட்டான். அவள் கண் முன்னே பழைய கால கோவில் ஒன்று இடிபாடுகளுடன் நின்றது.
பழங்கால சிற்பங்களை தாங்கி நின்ற வாசல் கோபுரத்தில் வெடிப்பும் பாசியுமாய் பரந்த சுற்று வட்டத்தில் அமைந்திருந்தது கோவில்.
