இதயம் தேடும் அவள் மொழி – 02
தேடல் – 26
‘நீ திருந்தவே மாட்டியா?’ என்பது போல் முறைத்த நிஷந்தாவிற்கு சற்று தூரத்தில் நின்ற ஒருவனை நோக்கி கண்ணை காட்டினான் சொரூபன்.
பிடித்தமின்றியே அவன் சொல்வதை செய்ய சென்றான் நிஷாந்த.
சொரூபனின் தொனியில் ஜானகி சற்று மிரண்டு போய் பார்க்க சட்டென திரும்பிப் பார்த்தாள் யதி. மனதினுள் எதுவோ சுருண்டு கொண்டது. அந்தக் குரலும் முகமும் சொன்னது உன் மீது அவன் கோபமாய் இருக்கிறான். ஆனால் ஏன்? அம்மாவை இத்தனை நாள் வைத்து காப்பாற்றி கொடுத்தற்கா?
முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளமால் ஜானகியின் கன்னத்தை வருடி விட்டவள் “நிச்சயமாய் உன் அண்ணன் வீட்டில் இல்லமால் வேற எங்க இருக்கிறது? அதோடு இவர்கள்தான் உன் அம்மா. இனி அம்மா என்றே கூப்பிடு” ஆதுரத்துடன் கூறினாள்.
“அம்மா” ஆர்வமாய் தர்சினியை நோக்க அவரோ மென்னகை புரிந்தார். இருவருக்கும் ஏற்கனவே நெருக்கம் இருந்ததால் அவள் எப்படி அழைத்த போதும் ஏற்றுக் கொண்டார்.
“இந்திரா உனக்கு தெரியாதா?” ஜானகி தலை சாய்த்துக் கேட்க சிறு குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள் யதி.
“இவர்கள் தான் என் அம்மா என்று”
ஒரு கணம் முகம் வேதனையை அப்பட்டமாய் வெளிக்காட்ட “எனக்கு தெரிந்திருந்தால் எத்தனையோ பிரச்சனை இல்லாமலே போயிருக்குமே” தவிப்புடன் சொன்னாள்.
அவள் தவிப்பில் ஜானகி மிரண்டு போய்ப் பார்க்க கணத்தில் தன்னை சமாளித்தவள் “அப்படியே உன் அண்ணனையும் அம்மாவுடன் பழக வைக்க வேண்டும், சரியா” தர்சினி ஜானகி இருவரது கையையும் எடுத்து சொரூபன் கையில் வைத்தவள் நிம்மதியாய் கூறினாள் “என் மிகப் பெரிய பாரம் குறைஞ்சிட்டு”.
அவள் குரலில் திடுக்கிட்டுப் போய் பார்த்தான் சொரூபன்.
அனைத்தையும் துறந்து போகும் துறவியைப் போலிருந்தது அவள் முகம். மீண்டும் பிடித்துக் கொள்வதற்குள் அவர்கள் கையிலிருந்து நழுவியிருந்தது அவள் கை. சொரூபனுக்கோ இதயம் நழுவி வெறும் கூடானது போலிருந்தது.
அவர்கள் அருகேயே நின்றிருந்த பாலாவின் நெற்றி சுருங்க சிறிது நேரம் யோசித்து விட்டுக் கேட்டார் “சொரூபா இது அன்று யோகேந்திரன் வீட்டில் வைத்து அறிமுகப்படுத்திய சின்ன பிள்ளைதானே”.
சற்று முன் அவளை தேளாய் கொட்டியதில் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த சொரூபன் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
“வணக்கம் சார்” அமைதியாய் அவரை நோக்கி கை குவித்தாள் யதிந்திரா.
அன்று நிலத்தில் கூட நிற்காமல் பந்து போல் துள்ளிக் கொண்டிருந்த பெண் கண் முன் வந்து செல்ல அவரது அனுபவம் மிக்க கண்களுக்கு தெளிவாகவே தெரிந்தது. முக ஒற்றுமையை தவிர அந்த சிறு பெண்ணிற்கும் இவளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
காலத்தால் முதிர்ச்சி அடைந்ததாய், வளர்ந்து விட்டதாய் தென்பட்டாலும் அவளில் ஏதோ ஒன்று குறைவது முதல் பார்வையிலேயே தெரிந்தது.
ஆனால் யாருக்குமே தெரியாத ஒன்று, அவள் கவலையின்றி பட்டாம்பூச்சி போல் சந்தோசமாய் இருந்த அந்த கடைசி நாள்தான் அவர்களை சந்தித்தாள் என்பது.
எதையோ கேட்க நினைத்து உணர்வு வறண்டிருந்த அவள் கண்களை கண்டு தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டார்.
“ஜானகி, நீண்ட தூர பயணம் செய்து வந்து இருக்கிறார்கள் ஃப்ரெஷ் ஆக அம்மம்மா அப்பா எல்லோருக்கும் அவரவருக்கு அறையை காட்டும்மா” என்று அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு கைபேசியில் சில அழைப்புகளை மேற்கொண்டாள். வீட்டிற்கு வேலைக்கு இருவரை வர சொன்னவள் அப்படியே மாறனுக்கு அழைத்தாள் “அண்ணா ஒருக்கா வீட்டு பக்கம் வந்திட்டு போங்கள். அப்படியே ஏதாவது சைன் பண்ண வேண்டி இருந்தால் அதையும் கொண்டு வாருங்கள்”.
அடுத்ததாய் யோகேந்திரனின் வீட்டில் வேலை செய்யும் தன் நம்பிக்கையான வேலையாளுக்கு அழைத்து அங்கே நிலவரத்தை விசாரித்தாள்,
“அம்மா அங்கேயிருந்து யாரோ முழு தகவல் கொடுகின்றார்கள். யாரென்று தெரியல, இன்று அங்கே நிறைய பேர் வந்த தகவல் கூட இங்கே உடனே வந்திட்டு”
“இப்போது அவரால் நடக்க முடியுமா?”
“கை தடியுடன்தான் ஆனா நடக்கிறார். அங்கே யாரையோ போட்டுத் தள்ள சொல்லி யாரிடமோ சொல்லி இருக்கிறார். கவனமம்மா, யாரென்றுதெரியல” மறுபுறம் எச்சரித்தான்.
“ம் சரி ஏதாவது என்றால் உடனே எனக்கு சொல்லுங்கள்” என்று அழைப்பை துண்டித்தவள் யாரோ கையை பிடித்து இழுப்பது போலிருக்க திரும்பிப் பார்த்தாள்.
தர்சினிதான், அவள் முகத்தை வைத்தே அல்லாடிக் கொண்டிருக்கும் மனநிலையை புரிந்தவர் போல் ஆதுரமாய் நோக்கினார். சட்டென அவர் மடியில் தலை வைத்து இடுப்பைக் கட்டிக் கொண்டாள். சொரூபனின் வார்த்தையில் அலை பாய்ந்து சோர்ந்த மனதை உடைய விடமால் ஒரு நிலையில் வைத்திருக்க பெரு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
மாடிப்படியின் முடிவில், நின்று அவள் முகத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் சொரூபன். கைப்பிடி சுவரில் பிடி இறுகியது. ஏதோ சினத்தில் அவளிடம் பாய்ந்துவிட்டான். வார்த்தையை விட்ட பின்பே அதன் வீரியம் உரைக்க, வாடியிருந்த அவள் முகத்தைப் பார்த்து உதட்டைக் கடித்தபடி நின்றிருந்தான்.
அவள் தலையை வருடிக் கொடுத்தவர் “இன்று நான் சமைக்கிறேன்” மெல்லச் சொன்னார்.
விழிகள் விரிய நிமிர்ந்து பார்த்தாள் யதி.
எப்போதாவது அபூர்வமாய் சமைப்பார். உணவு அப்படி ஒரு சுவையில் இருக்கும். இருவரும் பின்னும் முன்னும் கெஞ்சினாலும் செய்ய மாட்டார். இன்று செய்கிறேன் என்றதும் வியப்பும் மகிழ்ச்சியுமாய் சம்மதித்துவிட்டாள் யதி.
சற்று நேரத்தில் டிரைவர் அங்கிள் தேவையான மரகறிகளுடன் உதவிக்கு ஒருவரையும் அழைத்து வந்திருந்தார்.
“அம்மம்மாவும் அந்த அப்பாவும் குளித்து வார்றோம் என்றார்கள்” என்றவாறே ஜானகியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். ட்ரைவர் அங்கிளின் மேற்பார்வையில் அவர்களை சமைக்கவிட்டவள் நீண்ட பெருமூச்சுடன் சொரூபனின் அறையை நோக்கிச் சென்றாள்.
சொரூபன் குளித்து வந்து தலையை துடைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் நின்று கண்ணாடியில் அவன் உருவம் பார்த்தவள் சத்தமின்றி குளியலறைக்குள் நுழைந்து விட்டாள். அவனிடம்கேட்பதற்கும் சொல்வதற்கும் எத்தனையோ இருந்தது ஆனால்…
துவாய் கண்களை மூடியிருக்க அவள் வந்ததையோ குளியலறையில் நுழைந்ததையோ கவனிக்கவில்லை அவன். அவன் யோசனைகளும் எங்கேங்கோ அலைபாய கீழே வந்தவன் கண்கள் யதீந்திராவையே தேடியது. சற்று முன் கடுமையாய் பேசியதும், அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்த தோற்றமும் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்த கிச்சினை எட்டிப் பார்த்தான். உள்ளே தர்சினியும் ஜானகியும் சமைத்துக் கொண்டிருக்க சண்முகம் அங்கிளும் நின்றிருந்தார்.
ஏதோ தோன்ற “அங்கிள்,” அவரை அழைத்தான்.
அவன் அழைப்பில் வியப்புடன் பார்த்தவர் அருகே வந்து “தம்பி” என்றார்.
“எனக்கு….” அவர் கையில் இருந்த அடையாளத்தை பார்த்ததும் எதையோ கேட்க வந்தவன் வார்த்தை பாதியில் நின்றது.
“அஅஅன்று அது நீங்கள் தானா?” முகம் வெளுக்க கேட்டான். ஓரளவு துப்பறிந்து ஊகித்து அறிந்ததுதான் என்றாலும் நேரில் பார்க்கும் போது ஜிஎம்எஸால் தடுமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
எதுவும் பேசமால் அவனையே பார்த்திருக்க உள்ளிருந்து அழைத்தாள் ஜானகி “அங்கிள் வெங்காயம் வெட்டித் தாங்கோ, அது அழ வைக்கும்”
‘அந்த கொஞ்ச நாளில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது’ இளமாறனின் குரல் காதில் ஒலித்தது.
“அங்கிள் ப்ளீஸ் அன்று என்ன நடந்தது. அந்தக் கொலைகள் எல்லாம் யதி செய்யல. யோகேந்திரனின் சதி. இப்போது கூட அவளைக் கொல்ல ஆள் ஏற்பாடு செய்து இருக்கிறான்” அப்பா என்ற மரியாதை துளியும் இல்லை அவனிடம்.
அதிர்ச்சியில் தன்னிலை மறந்து அவன் தோளை இறுக பிடித்தவர் “உண்மையா தம்பி, அந்த சிறுபெண் எத்தனை நாள் ரத்தம் ரத்தமென்று தூக்கமின்றி தவித்தாள் தெரியுமா? அந்த யோகேந்திரனை நானே கொலை செய்யுறேன்” வெறியுடன் கிளம்பினார் அவர்.
“கொஞ்சம் பொறுங்கள் அங்கிள்” அவரைத் தடுத்தான் சொரூபன். “உங்களுக்கு ஏதாவது ஆனால் யதி தாங்கமாட்டாள்” என்றவன் அவரை ஆழ்ந்து பார்த்து “அன்று நடந்தது அவளை பாதித்து இருக்கு ஆனா என்ன நடந்தது என்று தெரியாமல் அதை சீர் செய்ய முடியாது” சற்று கவனத்துடன் சுற்றிலும் கண்ணை ஓட விட “மேலே போயிருக்கிற தம்பி, அவர்களுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று” சொரூபன் ஏதோ சொல்ல வர “சத்தியத்தை மீறுவதில் பிரச்சனை இல்ல. நடந்தது என்னவென்று எனக்கும் அவர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் தெரிந்ததாய் காட்டிக் கொண்டால் பின் என்னையும் விலக்கி வைத்து விடுவாள் அதுதான் யோசிக்கின்றேன்.” மெலிதாய் தயங்கினார்.
“நான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள். இப்போது அவசர வேலை அந்த யோகேந்திரன் கொல்ல ஆள் அனுப்ப தொடங்கிவிட்டான்” கோபத்தில் தாடை இறுக நின்றவன் திடிரென கேட்டான் “ஜெகதீஸ் பற்றி என்ன நினைகின்றீர்கள்?”.
“உங்களின் பிஏவா, அவரைப் பற்றி நான் என்ன நினைக்க?” குழப்பத்துடன் கேட்கவே லேசாய் அதிர்ந்த சொரூபன் இதழ்களில் ஒரு மெல்லிய நகை. சில விடயங்களை அருகில் இருப்பவருக்கு கூட தெரியாமல் எப்படி செய்து முடிக்கிறாள், ‘ஜிஎம்எஸ் பொண்டாட்டியா கொக்கா’ மனதினுள் சிலாகித்தவன் கை அவனையும் மீறி மீசையை முறுக்கியது.
“நான் கேட்க வந்ததை மறந்துவிட்டேன். யோகேந்திரன் எப்படி என்னை தேடாமல் விட்டான்” இங்கே வந்ததிலிருந்து மனதைக் குடைந்த கேள்வி.
“அது யதியின் திட்டம்…” மேற்கொண்டு சொல்வதற்குள் “உங்களுக்கு என்ன விருப்பம்?” தயக்கத்துடன் ஒலித்தது தர்ஷினியின் குரல்.
அவரின் இருகைகளையும் தன் கையுள் பொதிந்து கொண்டவன் “உங்கட கையால் எது தந்தாலும் எனக்கு விருப்பம் தான் அம்மா” மெலிதாய் குரல் நடுங்க கூறினான்.
அவன் கன்னத்தை நுனி விரல்களால் வருடிச் சென்ற அன்னையையே இமைக்காது பார்த்திருந்தவனை கலைத்தது நிஷாந்தாவின் குரல்.
“மச்சா”
“மச்சா, அந்த” என்று அவனிடம் ஏதோ சொல்ல வந்த நிஷாந்தவை திடீரென தோளோடு இறுக அணைத்துக் கொண்டான் சொரூபன்.
எதிர்பாராத அணைப்பில் “என்ன மச்சா” குழப்பமாய் கேட்கவே “நீ உண்மையிலேயே எனக்கு மச்சான் ஆகிட்டடா” நீண்ட குழப்பமான நேரத்தின் பின்னர் அடிமனதிலிருந்து வந்த உண்மையான குதுகலத்துடன் குதுகலித்தவனைப் பார்த்து மெலிதாய் முகம் சிவந்தவன் “போடா” என்றான்.
சொரூபன் தோள் மேல் கை போட நிஷாந்த தள்ளி விட என இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தார்கள் டிரைவர் அங்கிளும் ஜானகியும்.
வெளியே சென்ற இருவரது முகமும் தீவிரத்தை தத்தெடுத்தது.
“உம்மட்ட முக்கியமான விஷயம் கதைக்கோணும் எங்களுடன் வாரும். அவர்களுக்காக காத்திருந்த ஜெகதீசின் தோளில் கையை போட்டு அழைத்து சென்றான் சொரூபன்.
உள்ளே அந்த வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவனைக் கட்டிப் போட்டு இருந்தார்கள். கதிரையை இழுத்துப் போட்டு, இரு காலிலும் முழங்கை ஊன்றி, சற்று முன்புறமாய் குனிந்து அவன் முன் அமர்ந்தான் சொரூபன்.
“சோ” ஒற்றை வார்த்தை மட்டும் வந்தது.
“என் மீது கை வைத்தால் யோகேந்திரன் உன்னை விட மாட்டார்” திமிராய் சொல்ல தன்னை மீறி சிரித்துவிட்டான் சொரூபன்.
அவன் ரத்தம் மகன் மகளே காசு சொத்துக்கு முன் அவனுக்கு பெரிதில்லை. இதில் அடியாள் ஒருவனுக்காய் எதையும் விட்டுக் கொடுப்பானா?! அதையும் நம்பும் அவன் முட்டாள்தனத்தை பார்த்து சிரிப்பு மட்டுமே வந்தது.
